Monday, September 5, 2011

அனைத்துலக காவல்துறையால் தேடப்படுவோர் பட்டியலில் சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேர்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011, 01:53 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேரை கைது செய்வதற்கு அனைத்துலக காவல்துறைக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதனுக்கு எதிராக அனைத்துலக காவல்துறை பிறப்பித்துள்ள பிடியாணை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோருக்கு எதிராக இந்தியா ஊடாக அனைத்துலக காவல்துறை பிறப்பித்திருந்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிபடுத்தியதை அடுத்தே இந்தப் பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்காவைச் சேர்ந்த மொத்தம் 81 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 52 பேரைக் கைது செய்வதற்கான உத்தரவை சிறிலங்கா அரசு வழங்கியுள்ளது. ஏனையவர்களை கைது செய்வதற்கான உத்தரவை வேறு நாடுகள் வழங்கியுள்ளன.

இவர்களில் 19 பேரைக் கைது செய்வதற்கு இந்தியா பிடியாணை வழங்கியுள்ளது.

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 81 பேரில் 30 பேர் தீவிரவாதிகள் என்றும், 25பேர் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஏனைய 26பேரும் அச்சுறுத்தல், ஆட்கடத்தல், காயம் ஏற்படுத்தல், போதைப்பொருள் கடத்தல், போன்ற வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

அனைத்துலக காவல்துறையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேரில் 5 பேர் பெண்களாவர்.
அவர்களில் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நன்றி புதினப்பலகை இணையம்

    ReplyDelete